பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கூடம்- சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை
சங்ககிரி அருகே பராமரிப்பின்றி கிடக்கும் சமுதாய கூடம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-17 09:55 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கோனேரிப்பட்டி ஊராட்சி வெள்ளாளபாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் கடந்த 1999- 2000 ஆண்டில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது, இதனையடுத்து கடந்த 22 ஆண்டுகளாக போதிய வசதி இல்லாததால் சமுதாய கூடம் பராமரிப்பு இல்லாமல் சிமெண்ட் பெயர்ந்தும், முட்புதர்கள் அண்டி விஷ பூச்சிகள் நடமாடும் கூடமாக மாறி உள்ளது, இதனால் கோனேரிபட்டி ஊராட்சி வெள்ளாளபாளையம் சுற்றுவட்டார பகுதி மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டுமென்றால் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எடப்பாடி குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரூ1 லட்சம் வரை வாடகை கொடுத்து சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படும் நிலையில் உள்ளனர். மேலும் வசதி இல்லாத ஏழை மக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு வீட்டில் போதிய இடமின்றி தனியார் மண்டபத்திற்கு செல்ல வசதி இல்லாமலும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வெள்ளாபாளையம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் புதர் மண்டி கிடக்கும் சமுதாய நலக்கூடத்திற்கு அரசு நிதி ஒதுக்கி முட்புதர் செடிகளை அகற்றி பெயர்ந்து போன சிமெண்ட் தூண்களை சீரமைத்து ,கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.