காஞ்சியில் போதிய பஸ்கள் இயங்காததால் பயணியர் அவதி
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நுாற்றுக்கணக்கான பயணியகள் காலை முதல் குவிந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் காரணமாக நேற்று விடுமுறை என்பதால், பலரும் வெளியூர் சென்றனர். காஞ்சிபுரத்திலும் ஏராளமானோர் வெளியூருக்கு செல்ல ஆர்வம் காட்டியதால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நுாற்றுக்கணக்கான பயணியர் நேற்று காலை முதல் குவிந்தனர்.
ஆனால், போதிய பேருந்துகள் இல்லாததால், பயணியர் பலரும் அவதிப்பட்டனர். காஞ்சிபுரத்திலிருந்து வேலுார், சென்னை, பூந்தமல்லி, தாம்பரம் என முக்கிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் போதிய அளவில் இயங்காததால், பயணியர் பலரும் பேருந்தில் 'சீட்' பிடிக்க முண்டியடித்து ஏறினர்.
வெளியூரிலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்குள் நுழையும்போதே, பேருந்தில் ஏற முயன்றதால், பயணியரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போதிய பேருந்து சேவை கிடைக்காததால், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் முழுதும் காலை முதல், மாலை வரை பரபரப்புடன் காணப்பட்டது.
குழந்தைகளை வைத்திருந்த பெண்கள், முதியோர், நோயாளிகள் என, பலரும் பேருந்து கிடைக்காததால் சிரமப்பட்டனர்."