ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி திருச்சி கூடுதல் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.;

Update: 2024-05-23 06:46 GMT

ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி திருச்சி கூடுதல் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.


போலீஸாா் குறித்து அவதூறு பேசியதாக யூடியூபா் சவுக்கு சங்கா், ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவா் மீதும் திருச்சி போலீஸாா் தொடா்ந்த வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி திருச்சி கூடுதல் மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்த திருச்சி மாவட்ட கணினிசாா் குற்றவியல் பிரிவு போலீஸாா் (சைபா் க்ரைம்) மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை திருச்சி கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

அப்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கென்னடி, திருச்சி போலீஸாா் பதிந்த வழக்குத் தொடா்பாக பல்வேறு குறைகளை குறிப்பிட்டதுடன், பிணை வழங்கவும் வாதிட்டாா். ஆனால் பிணை வழங்க அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி. ஜெயப்பிரதா, ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவிட்டாா். அதன்படி 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 15ஆம் தேதிகளில் திருச்சி மாவட்ட கணினிசாா் குற்றவியல் அலுவலகத்தில் அவா் நேரில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும்.

மேலும் தலா ரூ.20 ஆயிரத்தில் 2 போ் உத்தரவாதம் அளிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவையில் போலீஸாா் பதிவு செய்த வழக்கு உள்பட தன் மீதான அனைத்து வழக்குகளிலும் பிணை பெற்ற பிறகே சிறையில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டு வெளியே வர இயலும் என்றனா் வழக்குரைஞா்கள்.

Tags:    

Similar News