தஞ்சாவூரில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு

தஞ்சாவூரில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-01-23 12:28 GMT


தஞ்சாவூரில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது


தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகம் கரிகாற் சோழன் கலையரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாடு - 2024 மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பேசியதாவது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,375 அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் முன்னேற்றத்திற்காக, பள்ளி மேலாண்மைக் குழுவில் பணியாற்றுகிற உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளைப் போல அரசுப் பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உண்டு. தமிழக அரசு தருகிற நிதி ஆதாரங்களைக் கொண்டு, பள்ளிகள் மாணவர்களின் வளர்ச்சியில் முக்கியத்துவம் தந்து பணியாற்றிட வேண்டும். பள்ளிகளின் அடிப்படை வசதிகள், மாணவர்களின் தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் மூலம் நடவடிக்கை எடுத்து ஒத்துழைப்பு நல்கும்" என்றார் ஆட்சியர். 

இம்மாநாட்டில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மைக்குழு பற்றி கூடுதல் தகவல் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி ஏற்படுத்தப்பட்டுள்ள குழு பள்ளி மேலாண்மைக் குழுவாகும். இக்குழு அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டுவருகிறது. பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்கும், பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், கல்வித் திறனை உயர்த்துவதற்கும் மற்றும் கற்றல் ஆர்வத்தை மேம்படுத்துவதற்கும் பொதுமக்கள் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர் உள்ளாட்சி பிரதிநிதி, கல்வி ஆர்வலர், இல்லம் தேடி தன்னார்வலர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவாக பள்ளியில் 2022-2023 கல்வியாண்டு முதல்  செயல்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டமானது மாதம்தோறும் முதல் வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை சார்ந்த பள்ளியில் நடைபெறும். இக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு குழுவின் உறுப்பினர்கள் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, பின்பு கலந்து ஆலோசித்து பள்ளியின் தேவைகளை தீர்மானங்களாக பள்ளி தீர்மான பதிவேடுகளில் பதிவு செய்தும் அத்தீர்மானத்தை TNSED PARENT APPல் பதிவேற்றம் செய்தும் வருகிறது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 1375 பள்ளி மேலாண்மைக் குழு அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.

Tags:    

Similar News