திருமயம் : 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருமயம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் பதுக்கலில் ஈடுபட்டவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-06-24 04:08 GMT
திருமயம் : குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை திருச்சி மண்டல எஸ்பி சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் சரக டி எஸ்பி சரவணன் அறிவுறுத்த லின்பேரில் புதுகை மாவட்ட போலீசார் நேற்று காலை திருமயம் தாலுகா அம்புராணி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்புராணி கீழத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். சோதனையில், 21 மூட்டை களில் சுமார் ஆயிரத்து 50 கிலோ அரிசி இருந்தது.விசாரணையில், பாஸ்கர் (50) என்பவர் கிராம மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மாவு மில்லில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அரிசியை பறிமுதல் செய்ததுடன் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.