தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற அதிரடி ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் உத்தரவின் படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா அறிவுறுத்தலின்படியும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, ஒரத்தநாடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் இலியாஸ் ஆகியோர் முன்னிலையில், பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வாட்டாத்தி கொல்லைக்காடு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்குள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடையுள்ள குட்கா, பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இரு கடைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இரு கடைகளும் 15 நாட்களுக்கு தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டது. மேலும் அங்குள்ள கடைகளில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த தரம் குறைவான, கெட்டுப் போன உணவுப் பொருட்கள் சுமார் 50 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கடைக்காரர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.