காங்கிரஸ் இயற்கைக்கு முரணான வாக்குறுதி: கே பி முனுசாமி விமர்சனம்
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இயற்கைக்கு முரணான வாக்குறுதிகளை அளித்துள்ளது என முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.
மகருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே பி முனுசாமி மற்றும் மாவட்ட கழக செயலாளரும்,
முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் இன்று தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்கு சேகரித்தனர். அப்பொழுது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய கே பி முனுசாமி இயற்கைக்கு முரணான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவிக்கிறது என விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை கார்கே வெளியிட்டுள்ளார். அதில் ஏழை குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் தேர்தலை சந்தித்தனர். அந்த தேர்தலில் ஏழை குடும்பத்திற்கு மாதம் 6 ஆயிரம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும், உயர்கல்வி மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்லகுமார் யார் என்று மக்களுக்கு தெரியாது. அதேபோல் 2021 இல் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் தற்போதைய தேர்தலிலும் அதே திமுக காங்கிரஸ் கூட்டணி புதிய வாக்குறுதியை அளிக்கிறார்கள்,
அதன்படி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் தரப்படும் என தெரிவிக்கிறார்கள் இந்திய துணை கண்டத்தில் சுமார் 30 கோடி குடும்பங்கள் உள்ளது அதில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் 10 கோடி என்றால் ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் வீதம் ஆண்டிற்கு 10 லட்சம் கோடி நிதி தேவைப்படும்.
மத்திய அரசின் வருவாய் மற்றும் கடன் எத்தனை லட்சம் கோடி என்பதை அறியாமல் இயற்கைக்கு முரணான வகையில் மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆட்சியில் இருக்கக்கூடிய ஸ்டாலின் 2021 இல் 520 வாக்குறுதிகளை அளித்தார் அதில் 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை உதாரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்,
என்றார் பெண்கள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றார் மின் கட்டணம் உயர்த்தப்படாது, மாதம் ஒரு முறை மின் கணக்கீடு செய்யப்படும் என்று கூறினார்கள் இதில் எதையும் செய்யவில்லை. இந்த நிலையில் தற்பொழுது ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், சிலிண்டர் 500 ரூபாய்க்கும் கொடுப்பேன் என மக்களை ஏமாற்றுகின்றார்.
திமுகவும் காங்கிரசும் வாக்குகளை சேகரிப்பதற்காக மக்களிடையே பொய்யான வாக்குறுதியை அளிக்கின்றனர் என பேசினார். தேமுதிக மாவட்ட செயலாளர் முருகேஷ், உடன் ஒன்றிய கழக செயலாளர் கணேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் மதன், அண்ணா தொழில் சங்கம் மாவட்ட செயலாளர்சீனிவாசன், மாவட்ட பொருளாளர் கந்தன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், மற்றும் ஊராட்சி மன்றம் தலைவர்கள், முன்னாள் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் இருந்தனர்,.