கடலூர் சாலைக்கு மேம்பாலம் அமைக்கும் பணி
கடலூர் செல்லும் சாலைக்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக, மாமல்லபுரத்திலிருந்து முகையூர் வரை, இப்பணிகள் நடக்கின்றன. கூவத்துார் அடுத்த கடலுார் காத்தங்கடை பகுதியில், அபாய வளைவுகள் கொண்ட பழைய கிழக்கு கடற்கரை சாலையை தவிர்த்து, சற்று கிழக்கில் புதிய தடமாக மாற்றி அமைக்கப்படுகிறது. இச்சாலையில், மதுராந்தகம் - கடலுார் மாநில சாலை குறுக்கிடுவதால், அங்கு தொலைதுார வாகனங்கள் இடையூறின்றி கடக்க, புதுச்சேரி சாலையில் மேம்பாலம் அமைய வேண்டும்.
அங்கிருந்து, தெற்கில் சில நுாறு மீட்டரில் குறுக்கிடும் சிறிய ஆற்றில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பால அமைவிட சூழல் காரணமாக, கடலுார் சாலையின் குறுக்கே பாலம் தவிர்க்கப்பட்டது. அப்பகுதியினர் ஆற்றுப்பால பகுதியில், குறுக்கே கடக்கும் வகையில், புதுச்சேரி சாலையின் இரண்டு புறமும், சர்வீஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. பொதுமக்களோ, சர்வீஸ் சாலையில் சுற்றிச்சென்று கடப்பதை தவிர்க்க, கடலுார் சாலை குறுக்கிடும் இடத்தில் மற்றொரு பாலம் அமைக்குமாறு, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், ஒப்பந்த நிறுவன ஊழியர்களிடம் தகராறு செய்து, கட்டுமான பணிகளையும் நிறுத்தினர். ஆற்றுப்பாலத்துடன் இணையும் பாதை, தரையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, கடலுார் சாலை பகுதியில் மிக உயரமாக அமைவதால், பாலம் கட்ட இயலாதது குறித்து, அப்பகுதியினரிடம் விளக்கி, மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். கடலுார் சாலைக்கு சற்று வடக்கில், அப்பகுதியினர் குறுகிய தொலைவே சென்று கடக்கும் வகையில், தற்போது பாலம் அமைக்கப்படுகிறது.