டெக்ஸ்டைல் நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆலோசனை
கரூரில் துணி நூல் துறை சார்பில், கோவையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் துணிநூல் துறை ஆணையர் டாக்டர். மு.வள்ளலார், இ.ஆ.ப அவர்கள் கோவையில் நடைபெற உள்ள தொழில் நுட்ப கருத்தரங்கிற்கு பங்கேற்பது தொடர்பாக தொழில் முனைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் துணிநூல் துறை ஆணையர் அவர்கள் தெரிவிக்கையில். ” கோவையில் 2023, நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்களில் நடைபெற உள்ள தொழில் நுட்ப ஜவுளிகளின் (Technical Textiles) உற்பத்தி மேம்பாடு குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஜவுளித்தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது கோயம்புத்தூரில் தொழில் நுட்பங்கள் ஜவுளிகள் (Technical Textile) குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது ”சிறிய அளவிலான ஜவுளிபூங்கா” உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறது. தொழில் முனைவோர்கள் தங்களிடம் குத்தகை அடிப்படையிலோ அல்லது சொந்தமாகவோ உள்ள 2 ஏக்கர் நிலத்தில், 3 ஜவுளி தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக முதலீடு செய்யும் தொகையில் 50% அல்லது ரூ.2.50 கோடி, இதில் எது குறைவோ அதனை அரசு மானியமாக வழங்கும்.
மேலும், தமிழக அரசு துணிநூல் துறையின் வாயிலாக, ஜவுளித் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களிலேயே திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கு வரவேற்பு உள்ளதை உணரவேண்டும். குறிப்பாக, ராணுவத்திற்கான ஆடைகள், மருத்துவ பயன்பாட்டுக்கான ஆடை மற்றும் துணிகள், விளையாட்டுத்துறை சார்ந்த ஆடைகள், தீயணைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு ஆடைகள் என பிரத்யேகமான தயாரிப்புகளை தயாரிக்க நிறுவனங்கள் முன் வரவேண்டும்.
தொழில் நுட்ப ஜவுளிகளின் எதிர் கால வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளதால், 2023, நவம்பர் 17-18 ஆகிய நாட்களில் கோவையில் நடைபெற உள்ள தொழில் நுட்ப ஜவுளி கருத்தரங்கில் பங்கு பெற்று, தொழில் நுட்ப ஜவுளி துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று, தொழில் நுட்ப ஜவுளிதுறையில் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்து பயன் பெறவேண்டும் என துணிநூல் துறை ஆணையர் டாக்டர். மு.வள்ளலார், இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.
இக்கருத்தரங்கில் முன்னோட்டமாக, தமிழக அரசின் துணிநூல் துறை, ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 95-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் தமிழ்செல்வி, டெக்ஸ் டைல்ஸ் ஸ்ரீரங்காபாலிமர்ஸ் நிறுவனத்தின் தலைவர் செந்தில்சங்கர், கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் நாச்சிமுத்து, சங்கதலைவர் கோபாலகிருஷ்ணன், இந்திய தொழில் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் சிவகண்ணன், மாவட்ட பொறுப்பாளர் பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.