நுகர்வோர் நீதிமன்றங்களில் முறையிடலாம் - ஆட்சியர்
நுகர்வோர்கள் பொருட்களின் தரம் மற்றும் சேவைகளில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றங்களில் முறையிட்டு தீர்வு காணலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி தூய மரியன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது: நுகர்வோர்களின் உரிமை என்ன, இந்திய குடிமகன்களின் உரிமை என்ன என அனைத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நாம் தெரிந்து வைத்திருந்தால் தேவையான நேரத்தில் நாம் பயன்படுத்த முடியும். நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாக்க 1986ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கியுள்ளார்கள்.
நாம் நிதி பற்றிய அறிவு மற்றும் சட்டங்கள் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும். பொருட்களை வாங்குபவர்கள்தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொருட்களின் தரத்தில் குறைபாடு இருந்தால் மற்றும் போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளில் குறைபாடு இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு நீதிமன்றங்களில் முறையிடலாம். அங்கு முறையாக விசாரணை செய்து தீர்வு வழங்கப்படும்.
நமக்கு அன்றாடம் தேவைப்படும் சட்டப்பூர்வமான உரிமைகளை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசியலமைப்பு சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கு.உஷா, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர்.ஜெஸி பர்ணான்டோ, எம்பவர் இந்தியா மேலாளர் ரா.லலிதாம்பிகை மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.