பாதை வசதி இல்லாத ஆய்வக கட்டடம் - மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அவதி
பாதை வசதி இல்லாத ஆய்வக கட்டடத்தால் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அவதி.
Update: 2024-01-29 07:31 GMT
காஞ்சிபுரம் சேக்குபேட்டை ஒட்டியுள்ள காந்தி மைதானத்தில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான உயிரியல், விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவுக்கான ஆய்வுக்கூடம் பள்ளி மைதானத்தில் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் ஆய்வகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கும் அவலநிலை உள்ளது. தற்போது செடி, கொடிகள் மண்டியுள்ளது. மைதானத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால், மாணவர்கள் ஆய்வகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, நடப்பு ஆண்டுக்கான பொதுத்தேர்வை ஒட்டி, செய்முறை தேர்வு துவங்குவதற்குள் ஆய்வகத்திற்கு செல்லும் வழியில் உள்ள புதர்களை அகற்றி, பாதை வசதி ஏற்படுத்த, காஞ்சிபுரம்மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.