இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து சி.பி.எம் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படு கொலைப் போரை உடனே நிறுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று முதல் சின்னஞ்சிறு பாலஸ் தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை அட்டூழியத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 36,000 பேருக்கு மேல் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களும், குழந்தைகளுமான அப்பாவி பொது மக்கள்.
இனவெறி இஸ்ரேல் அரசாங்கமானது, மருத்துவமனைகள், உணவுக்கூடங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றின் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்துகிறது. 26.05.2024 அன்று எல்லை நகரமான ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் குழந்தை களும், பெண்களுமாவர். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்து என்று சொன்ன பிறகும் இஸ்ரேல் அரசு போரை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலின் காட்டு மிராண்டித்தனத்தை ஆதரித்து ஆயுதங்களும், நிதி உதவிகளும் செய்து வருகின்றனர். இந்தியாவிலிருந்தும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றன.