கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட சிபிஎம் தீர்மானம்
தஞ்சை திமுக வேட்பாளர், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு கடுமையாக உழைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு கூட்டம், தஞ்சை கணபதி நகர் மாவட்டக் குழு அலுவலகத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, கட்சியின் மத்தியக் குழு, மாநிலக் குழு முடிவுகளை விளக்கி உரையாற்றினார். கூட்டத்தில், தீர்மானங்களை மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன் முன்மொழிய, ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .
கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோகரன், கே.பக்கிரி சாமி, சி.ஜெயபால், என்.வி. கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, என்.சுரேஷ்குமார், கே.அருளரசன், எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைபெற உள்ள 18ஆவது மக்களவைத் தேர்தலில், கடந்த பத்தாண்டு காலமாக நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் பாஜகவினுடைய, மக்கள் விரோதக் கொள்கைகளால் கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமான வரிச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளனர். பொதுமக்கள் நிலை அதலபாதாளத்தில் உள்ளது. கார்ப்பரேட்- இந்துத்துவா கொள்ளைக் கூட்டணி இந்த நாட்டையே அழித்துக் கொண்டிருக்கின்றது. மறுபுறம் விவசாயிகளுக்கு விரோதமாக விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கொடுக்கவில்லை. உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருட்கள் விலை மிகக் கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கின்றது.
விவசாயத்திலிருந்து விவசாயிகள் வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாய தொழிலாளர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 100 நாள் வேலையை முற்றாக அழித்து விடும் கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றிக் கொண்டிருக்கின்றது. தொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமை களும், கும்பல் பாலியல் வல்லுறவுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.
புதிய கல்விக் கொள்கை அமுல்படுத்தப்பட்டு உயர் சாதியினருக்கும், வசதி படைத்தோருக்கும் கல்வி கிடைக்கும் நிலை, சாதாரண தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் கொள்கை பின்பற்றப்படுகின்றது சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத வெறி தூண்டப்பட்டு நாடு முழுவதும் மதக் கலவரத்தை ஏற்படுத்துகின்றது. இத்தகைய மோசமான, அனைத்து தரப்பு மக்களுக்கு எதிராகவும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாசிச பாஜகவின் சர்வாதிகார ஆட்சியை முறியடித்திட, வரும் 2024 ஏப்.19 இல் தொடங்கி, ஜூன் 1இல் நிறைவடைய உள்ள இத்தேர்தல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாகும்.
எனவே மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட, மக்கள் ஒற்றுமை, ஜனநாயகம் பாதுகாக்கப்பட, சர்வாதிகாரத்தை வீழ்த்திட, இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஜனநாயக முற்போக்கு கூட்டணியின், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரின் வெற்றிக்கு கடுமையாக உழைத்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.