பல்கலைக்கழக வரைவு வழிகாட்டுதல் அறிக்கைக்கு கண்டனம்
பட்டியல் இனமக்களின் பணியிடங்களை பொதுப்பிரிவிற்கு மாற்றும் பல்கலைக்கழக வரைவு வழிகாட்டுதல் அறிக்கையை வன்மையாக கண்டிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ஜஹவரில்லாஹ் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழக மனிதநேய மக்கள் கட்சி மாநிலத்தலைவர் பேராசிரியர் ஜஹவரில்லாஹ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தற்போது பல்கலைக்கழக மானியகுழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் வரைவு பட்டியலில்,உயர்கல்வி நிறுவனங்களில் நிரப்பப்படும் பணியிடத்தில் பட்டியல் இன மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பணியிடம் தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படாமல் இருந்தால் அந்த பணியிடங்களை பொது பிரிவிற்கு மாற்றலாம் என்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும்,
இதன்மூலம் படிப்படியாக இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக முயல்வதாக குற்றம்சாட்டி னார். ஐஐடி ஆசிரியர், பேராசிரியர் பணியிடங்களில் பட்டியலின மக்களுக்கு கிடைப்பதும் அரிதாக உள்ளது என்றார். மேலும் பேசிய அவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்கனவே இந்தியா கூட்டணியை உடைக்கும் வகையில் நடந்து கொண்டார் என்றும் அது தற்போது நிரூபணமாகி உள்ளது என்றார்.
மேலும் நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்திருந்தால் தேவையில்லாத குழப்பம்தான் ஏற்பட்டிருக்கும் தற்போது அந்த நிலை மாறி இந்தியா கூட்டணி மகத்ததான வெற்றி பெறும் என்றார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள்கட்சி போட்டியிடும் என்றும் நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவுப்படி சமதர்ம,ஜனநாயக நாடாக இந்தியா திகழ இந்தியா கூட்டணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றார்.
மேலும் பேசிய ஆளுநர்களை பொறுத்தவரை அப்பதவியே தேவையில்லை என்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சியில் மக்களுக்கு தேவையான சட்டங்களை இயற்ற ஒப்புதல் தரமறுப்பதாகவும் தெரிவித்தார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு ஆகும். மேலும் ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் மகன் மற்றும் மகள் என்பதால் மட்டுமே அவர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது எனக் கூறுவது ஜனநாயக விரோத செயல் என்றார்.
மேலும் ஜனநாயகத்துக்கு விரோதமாகத் தான் பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று விமர்சனம் செய்தார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறுபான்மையினரின் காவலராக நடித்து வருகிறார் என்றும் சிஐ.ஏ சட்டத்திற்கு துணை நின்று இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்து விட்டதால் அவரின் நடிப்பு எடுபடாது என்றார்.