பட்டுக்கோட்டையில் வெள்ளரிப்பழம் விற்பனை மும்முரம்
கோடை வெப்பத்தால் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் வெள்ளரிப் பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
Update: 2024-04-23 11:35 GMT
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பட்டுக்கோட்டையில் வெள்ளரிப்பழம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு பழம் ரூ.50 முதல் 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வருகிறது. அதன்படி பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. சாலைகளில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் இளநீர், நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சி தரும் உணவுப்பொருட்களை சாப்பிட்டு வருகின்றனர். ஏற்கனவே வெள்ளரிப்பிஞ்சு விற்பனை நடந்து வருகிறது. சாலையோர கடைகளில் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டு வருவதால் அவற்றின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு வெள்ளரிப்பழம் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. வெள்ளரியை முதலில் பிஞ்சுக்காக சாகுபடி செய்வோம். வியாபாரிகள் பொதுமக்கள் சிலர் தங்களுக்கு வெள்ளரிப் பழமாக வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்காக பிஞ்சு பழமாகும் வரை சாகுபடி நிலத்தில் விட்டு விடுவோம். அதை போல் கடைகளில் வைத்தும் விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.