திம்மாவரம் வாழை தோட்டத்தில் ஊடுபயிராக மிளகாய் செடி சாகுபடி
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் பகுதியில் வாழை பயிரில் ஊடுபயிராக மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம், ஆத்துார், வில்லியம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், வாழை, நெல், வெண்டை, கத்தரி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. வாழை பயிரிடும் நிலத்தில், விவசாயிகள் ஊடுபயிராக நாட்டு மிளகாய் செடியை பயிரிடுகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,
இந்த பகுதியில், பல விவசாயிகள் பருவ மழை முடிந்த பின், வாழை சாகுபடியை துவங்குவது வழக்கம். தை மாதத்தில் நாட்டு மிளகாய் செடிகளை பயிரிடுவர். வாழை நீண்ட பயிர் என்பதால், வாழை கன்றுகளை நடவு செய்த அதே நிலத்தில், காலியாக உள்ள இடங்களில் நாட்டு மிளகாய் செடிகளை நட்டு உள்ளோம். நாட்டு மிளகாய் செடிகளின் விளைச்சல், நான்கு மாதங்களில் முடிந்து விடும்.
மேலும், வாழை மரத்திற்கு இடும் உரம், பூச்சிக்கொல்லிகள் மூலம் மிளகாய் செடிகள் வளர்ந்து விடும். இதற்கென தனியாக செலவு இல்லை. இதில் கிடைக்கும் மிளகாயை பெரும்பாலான விவசாயிகள் தங்களின் வீட்டு தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.