சேலத்தில் தபால்நிலையம் மூடப்பட்டதை எதிர்த்து வாடிக்கையாளர்கள்போராட்டம்
சேலத்தில் தபால்நிலையம் மூடப்பட்டதை எதிர்த்து வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் விஜயராகவன்நகர் பகுதியில் காசகாரனுர் துணை தபால் நிலையம் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையம் முன் அறிவிப்பு இல்லாமல் திடீரென மூடப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மூடப்பட்ட தபால் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த வாரம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து நேற்று சூரமங்கலம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தபால் நிலைய நிர்வாகம் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் அதே இடத்தில் தபால் நிலையம் இயங்க வேண்டும் எனவும் ஏற்கனவே 25 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த தபால் நிலையத்தை மூடக்கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் கூறும்போது:- பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த தபால் நிலையத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்கள் கணக்கு வைத்து வரவு செலவு செய்து வந்தனர். திடீரென இழப்பு ஏற்படுவதாக கூறி தபால் நிலையம் மூடப்பட்டது கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து அதே இடத்தில் தபால் நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் உண்ணாவிரதம், மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம என்றார்.