பெல் நிர்வாக அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினர் தர்ணா
புதிய சிப்ட் நடைமுறையை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெல் நிர்வாக அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-01-08 03:47 GMT
மத்திய தொழில்துறை நிறுவனமான திருச்சி பெல் நிறுவனத்தில் சுமார் சுமார் 5000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெல் நிர்வாகமானது புதிய ஷிப்ட் நடைமுறையை அமல்படுத்துவதாக அறிவித்தது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த காலை 8 மணிமுதல் மாலை 4.30 வரை ஒரு ஷிப்ட்டையும், மாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இருந்த மற்றொரு ஷிப்ட்டையும் ரத்து செய்வதாகவும், அதற்குப் பதிலாக புதிய ஷிப்ட் முறையான காலை 6.45 மணி முதல் மாலை 3.15 மணி வரையிலும், மாலை 3.15 மணி முதல் இரவு 11.45 மணி வரை ஷிப்ட்டை நடைமுறைப்படுத்துவதாக பெல் நிர்வாகம் அறிவித்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் புதிய ஷிப்ட் நடைமுறையை ரத்து செய்யக் கோரியும், பழைய ஷிப்ட் நடைமுறையை தொடர்ந்து செயல்படுத்த கோரியும் தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த மூன்றாம் தேதி மனு அளிக்கப்பட்டது. அதில் புதிய ஷிப்ட் நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்தால் ஜனவரி 8ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தனர். இதனிடைய பெல் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் பங்குபெறும் தொழிற்சங்கங்களான தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, பி.எம்.எஸ் உள்ளிட்ட சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பெல் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு பெல் நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெல் நிறுவனம் முன்பு பரபரப்பு நிலவியது.