சேலம் ஏற்காடு மலைப்பாதையில் சூட்கேசில் பெண் பிணம்

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் சூட்கேசில் அடைத்து உடலை வீசி சென்ற மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-21 06:03 GMT

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் சூட்கேசில் அடைத்து உடலை வீசி சென்ற மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.


சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் காட்டுத்தீ பரவுதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை ஏற்காடு 40 அடி பாலம் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அங்கு 20 அடி பள்ளத்தில் துர்நாற்றம் வீசியது. வனத்துறையினர் நாற்றம் வந்த பகுதியில் பார்த்த போது சூட்கேஸ் ஒன்று ஈக்கள், எறும்புகள் மொய்த்தபடி கிடந்தது. அது பிண நாற்றம் என்பதை உணர்ந்த வனத்துறையினர் ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், துணை போலீஸ் சூப்பிரண்டு அமல ஆட்வின், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு கிடந்த சூட்கேசை திறந்து பார்த்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேசுக்குள் கை, கால்கள் மடக்கி வைக்கப்பட்டு இளம்பெண் ஒருவரது உடல் இருந்தது. அது அடையாளம் காண முடியாதபடி அழுகிய நிலையில் இருந்தது.

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வடிவேல், கல்பனா விரைந்து வந்து கைரேகைகளை சேகரித்தனர். தொடர்ந்து சூட்கேசுடன் அந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

அந்த பெண்ணுக்கு 20 முதல் 25 வயது வரை இருக்கலாம் என்றும், கொலை செய்யப்பட்டு 4 நாட்கள் இருக்கும் எனவும் போலீசார் கூறுகின்றனர். கொலையான பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கொலையானவர் விவரம் தெரிய வந்த பிறகுதான் கொலைக்கான காரணமும், கொலையாளிகள் யார் என்ற விவரமும் தெரிய வரும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News