கும்பகோணத்தில் விற்பனைக்காக கொண்டு சென்ற இறந்த பசுமாடு பறிமுதல்!!
கும்பகோணத்தில், இறந்து இரண்டு நாள்களான பசுமாட்டை இறைச்சிக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24x7 Desk
Update: 2024-04-07 04:43 GMT
கும்பகோணத்தில், இறந்து இரண்டு நாள்களான பசுமாட்டை இறைச்சிக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில், திருப்பனந்தாள் பி.டி.ஓ., காந்திமதி தலைமையில், நாச்சியார்கோவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வழியாக வந்த டாடா ஏசி லோடு வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்தனர். அதில், இறந்து பசு மாட்டை, கோரைப்புற்களை போட்டு மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் செம்போடை பகுதியை சேர்ந்த மாட்டு வியாபாரியான ஜான்,24, டிரைவரான ராஜசேகர்,23 , ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இருப்பினும் போலீசார் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், பசு மாடு இறந்து இரண்டு நாள்களாகி விட்டதாகவும், இதனை இறைச்சி துண்டுகளாக வெட்டி, கும்பகோணத்தில் பிரபல ஹோட்டல்களில் விற்பனை செய்ய எடுத்து சென்றது தெரிந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், கும்பகோணம் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்தைய்யனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது முன்னிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மாடு புதைக்கப்பட்டது. மேலும் மாட்டு வியாபாரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிக்கப்பட்டு, எந்த ஹோட்டலுக்கு இறைச்சி சப்ளை செய்வதாக விசாரித்து வருகின்றனர். கோவில் நகரமான கும்பகோணத்தில், பசுமாட்டை இறைச்சிக்காக விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.