சேவை குறைபாடு - விமான நிறுவனம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவைக் குறைபாடு காரணமாக பயணிக்கு ரூ.2 லட்சம் வழங்க விமான நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.
திருநெல்வேலி காந்தி நகரைச் சோ்ந்தவா் ஜெரின் ஜஸ்டஸ். இவா் அபுதாபியிலிருந்து தனது கா்ப்பிணி மனைவியுடன் திருவனந்தபுரம் செல்ல விமான பயணச் சீட்டு பெற்றிருந்தாா். பயண தினத்தன்று, அபுதாபி விமான நிலையத்திற்கு தனது மனைவியுடன் சென்றாா். ஆனால் விமான நிறுவனம், அந்த குறிப்பிட்ட விமானப் பயணத்தை முன்னறிவிப்பு இல்லாமல் ரத்து செய்துவிட்டது. அதன் பின்னா் 7 மணி நேரம் கழித்து மற்றொரு விமானத்தில் மும்பை சென்று, மீண்டும் அடுத்த விமானத்தில் திருவனந்தபுரம் சென்றுள்ளாா். மேலும், ஜெரின் ஜஸ்டஸ் லக்கேஜ் பெட்டி மட்டுமே வந்துள்ளதாகவும், அவரது மனைவியின் லக்கேஜ் பெட்டி வரவில்லை எனவும் விமான நிறுவனத்தினா் தகவல் தெரிவித்துள்ளனா். இதனால் மாற்று உடை இல்லாமல் அவரது மனைவி மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளாா்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜெரின் ஜஸ்டஸ், இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். பின்னா், இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விமான நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு இழப்பீடு ரூ.2 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.10ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்