குடற்புழு வராமல் தடுக்க நன்றாக கை கழுவ வேண்டும் : தூத்துக்குடி ஆட்சியர் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் அய்யனடைப்பு ஊராட்சிக்குட்பட்ட சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதாரத்துறை மூலம் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று (09.02.2024) குடற்புழு நீக்க அல்போன்சால் மாத்திரைகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது, நமது வயிற்றில் புழு உண்டாவதை தடுப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
நமக்கு கிடைக்கும் சத்தானது அந்த புழுவிற்கும் கிடைக்கிறது. இதனால் நமக்கு சத்து குறைந்து வளர்ச்சி தடைபடுகிறது, நமது உடல், அறிவு வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து தேவை. அறிவு வளர்ச்சி நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். குடற்புழு வராமல் தடுக்க நன்றாக கை கழுவ வேண்டும். அதேபோல் நாம்; நடக்கும்போது செருப்பு அணிந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால் கால்களில் உள்ள வெடிப்புகள் வழியாக கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும்.
நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக, சுகாதாரமாக இருக்க வேண்டும். குடற்புழுக்கள் வந்தபின்னர் தடுப்பதற்குத்தான் இந்த முகாம் நடைபெறுகிறது. நீங்கள் வெளியே செல்லும்போது செருப்பு அணிந்து செல்ல வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரம்) பொற்செல்வன் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.