தர்மபுரியில் 106.7 டிகிரி வெப்பம் பதிவு
தர்மபுரி மாவட்ட வரலாற்றில் முதன்முறையாக, 106.7 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் .
தர்மபுரி மாவட்டத்தில் 2 மாதங்களாக கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. அதிகபட்சமாக நேற்று 106.1 டிகிரி வெயில் பதிவானது. மே மாதத்தின் முதல் நாளான நேற்று காலை 8 மணி முதலே வெயில் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தது.மாலை 6 மணிக்கு மேலும் வெயிலின் தாக்கம் நீடித்தது.
நேற்று தர்ம புரி மாவட்டத்தில் புதிய உச்சமாக 106.7 டிகிரி வெயில் பதிவானது. தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் அதிகரித்ததால் சாலையோர பகுதிகளில் நீர்மோர், தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், இளநீர் விற்பனை அதிகரித்தது. கடைகளில் எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட பழ ரசங்கள் விற்பனை அதிகரித்தது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அடிக்கடி கூடும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.