மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்

மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தக்கோரி துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-05 12:21 GMT

தர்ணா போராட்டம்

சேலம் ஊராட்சி ஒன்றியத்தில் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி உள்ளது. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கண்ணன், வார்டு உறுப்பினர்கள் மேகலா, பழனிசாமி, ஜெயராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் நேற்று சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் நடந்த பல்வேறு முறைகேடு குறித்து விசாரணை நடத்தக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும், அவரை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், முறைகேடு குறித்து விசாரணை நடத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறியதாவது:- மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் குறிப்பிட்ட சில வார்டுகளை தவிர மற்ற வார்டுகளில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. வார்டு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஊராட்சி மன்ற கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

ஊராட்சி நிதியை தவறாக பயன்படுத்தி மோசடி நடக்கிறது. இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கட்சி கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற வேறு பணிகளுக்கு அழைத்து செல்கிறார்கள். 10-வது வார்டில் அருந்ததியர் மக்களுக்கு சுடுகாடு இல்லை.

ஊராட்சி பகுதியில் உள்ள நிலத்தை மயானம் அமைக்க அளவீடு செய்து கொடுக்க மறுக்கிறார்கள். சாதி பாகுபாடு பார்க்கப்படுகிறது. எனவே, ஊராட்சியில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தி தலைவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News