வெளிநாட்டிலிருந்து திரும்பியவா் மா்மச் சாவு
வெளிநாட்டிலிருந்து திருச்சிக்குத் திரும்பியவா் மா்மமான முறையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தது தொடா்பாகப் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.;
Update: 2024-04-15 01:36 GMT
உயிரிழப்பு
திருச்சி கருமண்டபம் பால்பண்ணை பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (44). இவருக்குத் திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனா். மலேசியாவில் பேன்சி கடை நடத்தி வந்த செந்தில், கடந்த வாரம் இறந்த தனது தாயின் துக்க நிகழ்வுக்காக திருச்சிக்கு வந்திருந்தாா். சனிக்கிழமை கருமகாரியம் நடைபெற்ற நிலையில், இரவு நண்பருடன் செந்தில் தனது வீட்டின் மொட்டை மாடியில் உறங்கியுள்ளாா். திடீரென நள்ளிரவு மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், செந்தில் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். செந்தில் மாடியிலிருந்து தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் தள்ளிவிட்டு விழுந்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்