256 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி
விருதுநகரில் 256 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பும் பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்கான முழு ஏற்பாடும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் நாளை நடைபெறும் வாக்குப்பதிவில் 15 லட்சத்தி 48,800 நபர்கள் வாக்களிக்க இதற்காக 1689 வாக்குச்சாவடிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ள நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியாளர்கள் இந்த வாக்குப்பதிவு ஈடுபட்டுள்ளனர் மேலும் பாதுகாப்பு பணியில் எட்டாயத்திற்கு மேற்பட்ட காவலர்கள் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் சின்னங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி நிறைவடைந்த நிலையில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 256 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம், விவி பேடு மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வீல் சேர் வாக்குப்பதிவு மையத்திற்கு தேவையான பேனா, மை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும் பிரித்து வைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்பும்படி நடைபெற்றது.
இந்த பணியை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயசீலன் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் லாரி மூலம் காவல்துறையினர் மற்றும் சி ஆர் பி எஃப் உதவியுடன் 256 வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டது.