பூத் ஏஜெண்டுகளுக்கு அடையாள அட்டை விநியோகம்
திருப்பூரில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்கிற பூத் ஏஜெண்டுகளுக்கு அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டது.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 70.58 சதவீதம் அதாவது 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர். வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வருகிற 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு அலுவலர்களை பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. 6 சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியே வாக்கு எண்ணிக்கை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜை வீதம் மொத்தம் 84 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மேஜைக்கு ஒரு நுண் பார்வையாளர், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர் ஒருவர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர் ஒருவர் என ஒவ்வொரு மேஜைக்கும் 3 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தபால் வாக்குகள் 7 மேஜைகளில் எண்ணப்பட உள்ளது. 120 நுண்பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர் உள்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே ஒரு தொகுதிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான தாசில்தார் தலைமையில் 70 பேர் வீதம் 6 தொகுதிக்கு 420 பேர் உள்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், பூத் ஏஜெண்டுகள் 1274 பேர், 13 வேட்பாளர்கள், 13 வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியை கண்காணிக்கிறவர்களுக்கும் அடையாள அட்டை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டது. இதனை அரசியல் கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் வாங்கி சென்றனர்.