வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கும் பணி தொடக்கம் !
வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிப்பதற்கான பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா இன்று (01.04.2024) தொடங்கிவைத்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு 2024 ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, 33.தேனி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தயார் செய்யப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிப்பதற்கான பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா இன்று (01.04.2024) தொடங்கிவைத்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 33.தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நிறைவுபெற்று, வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பொதுக்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் இறுதி செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்க திட்டமிடப்பட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் 1225 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மூலம் வரப்பெற்ற வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் வாக்காளர் கையேடு ஆகியவற்றை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கி, பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்கான பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் உள்ள 198-ஆண்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,76,027 வாக்காளர்கள் 199-பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,87,092 வாக்காளர்கள் 200-போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,74,259 வாக்காளர்கள் 201-கம்பம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,82,794 வாக்காளர்கள் என மொத்தம் 11,20,172 வாக்காளர்களுக்கான வாக்காளர் தகவல் சீட்டுகள் வரப்பெற்றுள்ளது.
இப்பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டு 13.04.2024-க்குள் அனைத்து பொதுமக்களுக்கும் வழங்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேற்படி, வாக்காளர் தகவல் சீட்டில் மாநிலம், சட்டமன்றத் தொகுதி, வாக்காளர் பெயர், பாலினம், வாக்காளர் அடையாள அட்டை எண், தந்தையின் பெயர், வாக்குச் சாவடி விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த தகவல் சீட்டில் வாக்காளரின் புகைப்படம் இடம் பெறாது.
வாக்காளர் தகவல் சீட்டு வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வாக்காளர் அடையாள அட்டை சீட்டுடன் இந்திய தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 12 மாற்று ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தினை பயன்படுத்தி வாக்காளிக்குமாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.