காஞ்சிபுரம் தொகுதியை கேட்கும் காங்கிரசுக்கு திமுகவினர் எதிர்ப்பு
காஞ்சிபுரம் லோக்பா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கேட்டுள்ளது. இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் அறிவித்து, ஏப்ரல் மாதம் நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தீவிரமாக தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு துவங்கியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தன் முதற்கட்ட தொகுதி பங்கீடுக்கான பேச்சில், ஈடுபட்டுள்ளது. அதன்படி, 2019ல் போட்டியிட்ட தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் 15 தொகுதிகளை அடையாளம் காட்டியுள்ளது.
அதில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியும் உள்ளது. காஞ்சிபுரத்தில் போட்டியிட காங்., விருப்பம் தெரிவித்துள்ளதால், அம்மாவட்ட தி.மு.க.,வினரிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியினர் கூறியதாவது,காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிகளில் பலமாக உள்ள தி.மு.க.,வுக்கு, வரும் லோக்சபா தேர்தலில்,
வெற்றி பெற சாதகமான சூழல் உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதியை காங்.,குக்கு விட்டுத் தராமல், தி.மு.க., தக்க வைக்க வேண்டும். கடந்த 2014 லோக்சபா தேர்தலில், காங்., சார்பில் விஸ்வநாதன் தனித்து போட்டியிட்டார்.
வெறும் 33,000 ஓட்டுகளே அவருக்கு கிடைத்தன. தி.மு.க.,வுக்கு 3.5 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. 2019 தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு செல்வம் வெற்றி பெற்றார். இவ்வாறு அவர்கள் கூறினர்.