இரட்டை இலைக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம் - அன்புமணி

தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லாத நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். எனவே, ஒரு மாற்றத்தை கொண்டுவர வாக்காளர்கள் அனைவரும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2024-04-12 07:48 GMT

அன்புமணி ராமதாஸ் பிரசாரம் 

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சேலம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மெய்யனூரில் நேற்று இரவு நடந்தது. இதில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் ஆளுகிற தி.மு.க., ஏற்கனவே ஆண்ட அ.தி.மு.க. கட்சிகளால் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால் ஒரு மாற்றம் வேண்டும் என பொதுமக்கள் முடிவு செய்துவிட்டார்கள். 2026-ல் நடைபெறுகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத கூட்டணி ஆட்சி அமையும். அதற்கு முன்னோட்டமாக இந்த நாடாளுமன்ற தேர்தல் அமைய போகிறது. கடந்த 57 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்தது போதும்.

ஒரு மாற்றத்தை தாருங்கள். 2026-ல் தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கூட்டணி ஆட்சி அமையும். அப்போது இலவசமாக தரமான கல்வியை வழங்குவோம். மேலும், நீர்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்போம். அ.தி.மு.க.வினருக்கு ஒன்றை கூறுகிறேன். உங்களுக்கு பிரதமர் வேட்பாளரும் கிடையாது. தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லாத நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து உங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். எனவே, ஒரு மாற்றத்தை கொண்டுவர வாக்காளர்கள் அனைவரும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Tags:    

Similar News