வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
காளையார் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. பெரிய மாடு பிரிவில் 5 மாட்டு வண்டிகளும், சிறிய மாடு பிரிவில் 14 ஜோடி என 19 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
தொண்டி - மதுரை சாலையில் நடைபெற்ற போட்டியில் பெரிய மாட்டுப் பிரிவிற்கு 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும் விழா குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்ற மாடுகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியினை காளையார்கோவில், கொல்லங்குடி, அழகாபுரி, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலிருந்து உற்சாகமாக கண்டுகளித்தனர்.
போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும், கேடயமும், ரொக்க பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.