இரட்டிப்பு வருமானம்; ஆன்லைன் மோசடி !

இரட்டிப்பு வருமானம் தருவதாக ஆன்லைன் மூலம் லிங்க் அனுப்பி ஊட்டி வாலிபரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-03-15 13:13 GMT

 பைல் படம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 31 வயது வாலிபரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து பண முதலீடு மற்றும் வருவாய் ஈட்டுவது தொடர்பான ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சில டாஸ்க்குகளை முடித்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பி ரூ.11 லட்சத்து 96 ஆயிரத்து 103ஐ பல்வேறு தவணைகளாக அவர் முதலீடு செய்தார். அந்த வாலிபர் எதிர்பார்த்ததை போல இரட்டிப்பு வருமானம் கிடைக்கவில்லை. மேலும் முதலீடு செய்த பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. இது குறித்து கேள்வி கேட்க முயன்ற போது யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் இது குறித்து ஆன்லைன் மூலம் நீலகிரி மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்தார்.

இதன் பேரில் ஊட்டி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், ஆன்லைன் முறையில் லிங்க் மூலம் பணம் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் போலீஸார் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News