திராவிட கழகத் தலைவர் வீரமணி பெரம்பலூரில் பிரச்சாரம்
திராவிட கழகத் தலைவர் வீரமணி பெரம்பலூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து திராவிட கழக தலைவர் வீரமணி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மூலம் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை எளிய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் மிகப் பெரிய அளவில் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தினை பார்த்து பல்வேறு உலக நாடுகளும், நமது நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் வியந்து அதனை செயல்படுத்தி வருகின்றனர். அதேபோல ஏழை எளிய பெண்கள், தங்களது வாழ்வாதாரத்தில் முன்னேறுவதற்கு கல்வி முக்கியம் என்பதால், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது, இதுபோல திமுக ஆட்சியில் சொல்லப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால்,
தொடர்ந்து பேசிய வீரமணி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சொல்லப்பட்ட எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்த மோடி அதனை செயல்படுத்தவில்லை. இது மட்டும் இன்றி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இப்படி பாரதிய ஜனதா கட்சி அறிவித்த எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தாமல் மக்களை வஞ்சித்து வருகிறது.
எனவே திமுக சார்பில் போட்டியிடும் அருண்நேருவிற்கு வாக்களித்து அவரை மற்ற தொகுதிகளை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார். இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், தி கா மாவட்ட செயலாளர் தங்கராசு ,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்லதுரை,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ்,விசிக மாவட்ட செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.