தண்ணீர் நிறைய பருகினால் சிறுநீரகத்தைப் பாதுகாக்கலாம்

கோடைகாலத்தில் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை நீர் ஆகாரங்களைப் பருகினால் சிறுநீரகத்தைப் பாதுகாக்கலாம் என தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வரும் அறிவுறுத்தினார்.

Update: 2024-03-15 13:47 GMT

கோடைகாலத்தில் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை நீர் ஆகாரங்களைப் பருகினால் சிறுநீரகத்தைப் பாதுகாக்கலாம் என தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வரும் அறிவுறுத்தினார்.

கோடைகாலத்தில் தண்ணீர் உள்ளிட்ட இயற்கை நீர் ஆகாரங்களைப் பருகினால் சிறுநீரகத்தைப் பாதுகாக்கலாம் என்றார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வரும், மருத்துவக் கல்வி இயக்குநருமான ஆர். பாலாஜிநாதன். இக்கல்லூரியில், சிறுநீரகவியல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக சிறுநீரக நாள் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

சிறுநீரக பாதிப்பைப் பொருத்தவரை எந்த அறிகுறியும் இல்லாமல், செயலிழந்து முற்றிய பிறகுதான் தெரிய வரும். செயலிழந்த பிறகு ரத்த சுத்திகரிப்பு மற்றும் மாற்று சிறுநீரகம் பொருத்தும் நிலை ஏற்படும். ஆரம்ப அறிகுறியாக கால்களிலும், முகத்திலும் வீக்கம் ஏற்படும். சிறுநீர் கழிக்கும் அளவு குறையத் தொடங்கும். நம் நாட்டில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறுநீரகத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக பாதிப்பால் ஆயிரம் நோயாளிகள் புதிதாக வருகின்றனர். சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, கிருமி தொற்று போன்றவற்றால் சிறுநீரக பாதிப்புக்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. மது, போதைப்பொருள் உட்கொள்தல், சுய சிகிச்சைக்காக வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல், ரசாயனம் கலந்த உணவு சாப்பிடுதல், தலைமுடிக்கு சாயம் பூசுதல், போன்றவையும் சிறுநீரக பாதிப்புக்கு காரணிகளாக இருக்கின்றன.   எனவே, நன்றாக இருக்கிற இரு சிறுநீரகங்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இந்த கோடைகாலத்தில் சிறுநீரகத்தைப் பாதுகாக்க நிறைய தண்ணீர், மோர், இளநீர் போன்ற நீர் ஆகாரங்களைக் குடிக்க வேண்டும். அடக்கி வைத்து சிறுநீர் கழிப்பதைக் கைவிட்டு, மஞ்சள் நிறமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல, உணவு, குளிர்பானங்களில் ரசாயன சேர்க்கையையும், பாட்டிலில் வரக்கூடிய பானங்களையும் தவிர்க்க வேண்டும். சிறுநீரகத்தைப் பாதுகாக்க நிறைய வழிமுறைகள் உள்ளன. அதற்கு மருத்துவரை அணுகி முறையாகச் சிகிச்சை பெற்றால் சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும். சுய சிகிச்சை செய்து கொள்வதைக் கைவிட வேண்டும். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை இதுவரை 14 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் மருத்துவக் காப்பீடு மூலம் அனைத்தும் இலவசமாக செய்யப்படுகிறது. மேலும், இம்மருத்துவமனையில் 66 நோயாளிகள் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார் பாலாஜிநாதன். இவ்விழாவில் மருத்துவக் கண்காணிப்பாளர்  சி.ராமசாமி, துணை முதல்வர் என்.ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலர் ஏ.செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் கே.எச்.முகமது இத்ரிஸ், சிறுநீரகவியல் துறைத் தலைவர் ஜி.கௌதமன், முதுநிலை உதவிப் பேராசிரியர் வி.ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News