வணக்கம்பாடி கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
வணக்கம்பாடி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே வணக்கம்பாடி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பகல் 2 மணி முதல் 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகில் உள்ள மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனன் உருவம் மண் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.தொடர்ந்து துரியோதனன், பீமன் வேடமிட்ட நாடக கலைஞர்கள் தண்டாயுதங்கள் ஏந்தி சண்டைக் காட்சி நடைபெற்றது.
3 முறை மண் சிற்பத்தை வலம் வந்த பீமன், துரியோதனின் தொடை பகுதியில் கட்டையால் அடித்து துரியோதனன் படுகளம் செய்தார். பின்னர் துரியோதனனின் தாயார் காந்தாரி இறந்த மகனை பார்த்து ஒப்பாரி வைத்து அழுகிற காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழா குழுவினர், ஊர் நாட்டமைதாரர்கள், ஊர் பொதுமக்கள் உள்பட வணக்கம்பாடி சுற்றியுள்ள மோசூர், வளையாத்தூர், பாளையம், தாமரைபாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை தீமிதி விழாவும், இரவு சாமி ஊர்வலம், நாடகம் நடைபெற்றது.