கல்குவாரியில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் அருகே கல் குவாரியில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள தாயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி வயது 68. இவர் மாரியம்மாள் என்பவரை திருமணம் முடித்து இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குருசாமி இப்பகுதியில் கட்டிட பணிக்கான சென்டரிங் வேலை செய்து வருகிறார். குருசாமி நேற்று வேலை இல்லாததால் தாயில் பட்டி அருகில் உள்ள கோதை நாச்சியார்புரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் ஆடைகளை கழற்றி வைத்துவிட்டு குவாரியில் உள்ள குழியில் குளிப்பதற்காக இறங்கியுள்ளாதாக தெரிய வருகிறது இதில் நிலை தடுமாறி குவாரி குழியில் விழுந்த குருசாமி நீரில் மூழ்கி உள்ளார். இந்த நிலையில் குருசாமியின் மனைவி கணவரை காணாமல் தேடிய நிலையில் குவாரிக்கு குளிக்க சென்றது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அப்பகுதியில் தேடிய போது குருசாமி கழற்றி வைத்த ஆடை இருந்தது தெரிய வந்தது.
இதனால் குவாரி குழியில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர் பல மணி நேர தேடுதலுக்குப் பின்னர் குவாரி நீரில் மூழ்கிய குருசாமியை சடலமாக மீட்டனர். குளிக்கச் சென்ற போது குவாரியில் மூழ்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.