தேர்தல் நடத்தை விதிகள் - அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம்
நாகையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த அங்கிகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 நடைபெறவுள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான கூட்டம் நாகப்பட்டினம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாகப்படடினம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: பொதுவான நடத்தை விதிமுறைகளாக, பல்வேறு சாதி, இனம், மதம், மொழியைச் சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளைத் தீவிரமாக்கும் வகையிலான செயலிலோ ஒருவருக்கு ஒருவர் இடையில் வெறுப்பை உருவாக்கும் வண்ணம் அல்லது பதற்றத்துக்கு வழி செய்யும் எந்த செயலிலும் எந்தவொரு கட்சியோ வேட்பாளரோ ஈடுபடக்கூடாது. பிற கட்சிகள் மீது விமர்சனம் மேற்கொள்ளும்போது, அக்கட்சிகளின் கொள்கைகள். செயல்திட்டங்கள். கடந்த காலச் செயல்பாடுகள், நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பான விமர்சனமாக இருக்க வேண்டும்.
பிற கட்சிகளைச் சார்த்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பொது வாழ்க்கையோடு தொடர்பற்ற சொந்த வாழ்க்கையைப் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும். பிற கட்சியினர் மீதான நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கப்படக் கூடாது.
தேர்தல் பிரசாரக் களமாக, மசூதி. சர்ச் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் பயன்படுத்தப்படக்கூடாது. தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல், வாக்காளர் ஆள்மாறாட்டம் செய்தல், வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டர் சுற்றெல்லைக்குள் தங்களுக்கு வாக்களிக்குமாறு கோருதல், தேர்தல் பரப்புரைக்கான நிறைவு நேரத்திலிருந்து வாக்குப் பதிவு முடிவடைவது வரையிலான 48 மணி நேரத்திற்குள் பொதுக் கூட்டங்கள் நடத்துதல் மற்றும் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற "முறைகேடான" நடவடிக்கைகளை அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
ஒரு தனி நபரின் அரசியல் கருத்துகள் அல்லது அரசியல் செயல்பாடுகள் ஆத்திரமூட்டும் வகையில் அமைய நேர்ந்தாலும், அமைதியான, இடர் இல்லாத குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கான அவரது உரிமை மதிக்கப்பட வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், தனிநபரின் கருத்துகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடும் விதமாக, அவர்களின் வீடுகளுக்கு முன்பாக போராட்டங்களிலும் மறியல்களிலும் ஈடுபடக் கூடாது. தனி நபருக்குச் சொந்தமான இடங்களில், கட்டடங்களில், சுற்றுச்சுவர்களில் அவர்களின் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடுதல், பதாகை வைத்தல், சுவரொட்டிகளை ஓட்டுதல், பரப்புரை வாசகங்களை எழுதுதல் போன்ற வேட்பாளர்கள் தங்களது செயல்களை செய்ய அரசியல் கட்சிகள் அல்லது தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது.
ஒரே நேரத்தில், ஒரே பாதையிலோ அல்லது அதே பாதையில் பகுதியளவு வருமாறோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ய விரும்பினால், ஊர்வலத்தில் எவ்வித மோதல்களும் இடம்பெறா வண்ணமும், போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையிலும் பார்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே முடிவு செய்து கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் திருப்திகரமாக ஏற்பாடு செய்வதற்காக உள்ளுர் காவல்துறையினரின் உதவியையும் கோரிப் பெறலாம். இதற்காக, அரசியல் கட்சியினர் கூடுமான வரையில் விரைவாக காவல் துறையினரைத் தொடர்பு கொள்ளலாம். பிரச்சார கூட்டங்கள் / ஊர்வலங்கள் / தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெற கோரும் அரசியல் கட்சிகள் / அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், தங்களது மனுக்களை 48 மணி நேரத்திற்க்கு முன்பு கீழ்கானும் இணையதள முகவரியில் விண்ணப்பம் தாக்கல் செய்திட வேண்டும்.
https://suvidha.eci.gov.in/login/ நடந்திடவும், வாக்காளர்கள் எவ்வித தொந்தரவும் இடையூறும் இல்லாது முழுச் சுதந்திரத்துடன் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திடவும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஆட்சி அதிகாரத்திலுள்ள கட்சி மத்தியிலோ, மாநிலத்திலோ அல்லது அந்தந்த மாநிலங்களிலோ, ஆட்சியிலுள்ள கட்சியினர் தங்கள் அலுவலக அதிகாரத்தை, தங்கள் தேர்தல் களப்பணிகளுக்காகப் பயன்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வகையிலும் இடமளிக்கக் கூடாது. ஓய்வில்லங்களும், மாளிகைகளும், அரசுக்குச் சொந்தமான தங்குமிடங்களும், ஆளும் கட்சியினர் அதன் வேட்பாளர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது கூடாது. பிற கட்சிகளும் வேட்பாளர்களும் முறையாக அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆனால், எந்தவொரு கட்சியோ, வேட்பாளரோ தேர்தல் அலுவலகமாகவோ தேர்தல் பிரச்சாரத்திற்கான பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கோ மேற்சொன்ன தங்குமிடங்களைப் (அவற்றோடு தொடர்புடைய வளாகங்களுடன்) பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். அரசு நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களிலும் பிற ஊடகங்களிலும் விளம்பரப்படுத்துதல் தேர்தல் நேரங்களில், அரசு ஊடகத் துறையின் வாயிலாக ஒருதலைப்பட்சமான அரசியல் செய்திகளை மட்டும் சேகரிக்கச் செய்வதும், அரசின் வாய்ப்பு வளங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதும் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் நாகப்பட்டினம் நேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் .ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) யாஸ்மின் சகர்பான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பி.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தஇராமன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொன்டனர்.