தேர்தல் நடைமுறை: வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு

தேர்தல் நடைமுறையால் வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் குமாரபாளையத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2024-04-18 13:53 GMT

வழக்கறிஞர்கள் சங்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நீதிமன்ற வளாகம் 2020, ஜூலை 18ல் துவக்கப்பட்டது. அப்போது முதல், வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை, இல்லாத நிலையில், சங்க நிதியிலிருந்து இவைகளை அமைத்து கொள்ள கூட அனுமதி தரவில்லை.

பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள், பொதுமக்களுக்கான கழிப்பிடங்கள், வழக்கறிஞர்களுக்கான ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து ஏப். 15 முதல் நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணராஜன் தலைமையில் நடந்தது. இதில் சார்பு நீதிமன்றம் அமைய முன்னெடுப்பு பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை என்பதாலும், அடிப்படை வசதிகள் பலமுறை கேட்டும் செய்து தராததாலும்,

நீதிமன்ற தொடர் புறக்கணிப்பு செய்வது எனவும், ஏப். 18, நீதிமன்ற வளாகம் முன்பு, மாவட்ட நீதிபதியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்ட போது, அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது: தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் கூறினர். அதனால், இன்று நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த வாரத்தில் ஒருநாள் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஆயினும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News