காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மொபைல் ஆப் மூலம் கணக்கீட்டு பணி செய்திட செல்போன் அல்லது கையடக்க கணினி வழங்க வேண்டும், மொபைல் டேட்டாவிற்கு மாதந்தோறும் ரூ.500 வழங்க வேண்டும், கணக்கீட்டு பிரிவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும்.
நெட்வொர்க் பிரச்சினைகளை சரிசெய்யாமல் ஊழியர்கள், நுகர்வோர்களை அலைக்கழிக்கக் கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடுமின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட சிறப்புத்தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, திட்ட செயலாளர் சேகர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகி நிஷாந்தி, கணக்கீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் அருள் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் நிர்வாகிகள் கன்னியப்பன், முருகானந்தம், ஏழுமலை, அசோக்குமார், ராஜா, செல்வக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கோட்ட செயற்குழு உறுப்பினர் பரிமளா நன்றி கூறினார்.