யானை தாக்கிப் பெண் படுகாயம்; எம்.எல்.ஏ., ஆறுதல்
காரிமங்கலம் அருகே யானை தாக்கியதில் படுகாயமடைந்த பெண், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ. அன்பழகன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. இந்த யானை காலை நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதும், கிராமப்புறங்களில் நுழைந்து விவசாய பயிர்களை அழிப்பதுமாக இருந்து வந்துள்ளது. இதனை கடந்த மூன்று நாட்களாக பாலக்கோடு - காரிமங்கலம் இடையில் உள்ள ஆராதஹள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காரிமங்கலம் பகுதியை நோக்கி யானை சென்றுள்ளது. அப்பொழுது சவுளுக்கொட்டாய் பகுதிகளில் விவசாய நிலங்களில் நுழைந்துள்ளது. வனத் துறையினரால் யானையினை கண்காணித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் யானை சென்ற திசை தெரியாமல் வனத் துறையினர் அதே பகுதியில் சுற்றி தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதிக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை அந்தப் பகுதியில் உள்ள பெருமாள் என்பவரின் மனைவி ஜெயஶ்ரீ என்பவர், இன்று வயல்வெளி பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென வந்த யானை ஜெயஸ்ரீயை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி அதை இடத்தில் விழுந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ நீண்ட நேரமாக வராததால், வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சுயநினைவின்றி படுகாயத்துடன் கிடந்துள்ளார். அதன் அருகில் கரும்பு தோட்டத்தில் ஒற்றை யானை இருந்தது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், அவரை உடனடியாக அந்த இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர்.
அப்பொழுது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது நுரையீரல் பகுதியில் யானை பலமாக தாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்த நிலையில் ஒற்றை ஆண் யானை தாக்கியதில், படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெயஸ்ரீ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சரும் தற்போது பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான திரு கே பி அன்பழகன் தகவல் அறிந்து உடனடியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சிகிச்சை பெற்று வரும் ஜெய்ஸ்ரீயை நேரில் சந்தித்தார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார் மருத்துவ அலுவலர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.