வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்ற கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறையில் (பிஎஸ்சி கேட்டரிங் சயின்ஸ் அன்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) பயின்ற மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி வேலைவாய்ப்பு துறையின் மூலம் உலகிலேயே உணவு பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடான டிரானாவில் உள்ள புகழ் பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் (BOUGAINVILLE BAY RESORT AND SPA) 15 மாணவர்கள் வருடத்திற்கு ரூ.4 லட்சம் ஊதியத்துடன் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
மேலும், டிரானா நாட்டிற்கு செல்வதற்கு தேவையான விமான பயணச்சீட்டு, தங்குமிடம் மற்றும் உணவு போன்றவற்றை சம்மந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகமே பொறுப்பேற்று, மாணவர்களுக்குப் பணியில் சேருவதற்கான பணி நியமன கடிதத்தை வழங்கியுள்ளனர்.
வேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவர்களை கல்லூரியின் தாளாளர் தங்கவேல், கல்லூரியின் முதல்வர் முனைவர் வாசுதேவன் மற்றும் உணவு மற்றும் விடுதி மேலாண்மை துறையின் தலைவர் கார்த்திகேயன் ஆகியோரின் வாழ்த்துகளை பெற்றனர். மேலும் தற்போது கல்லூரியில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு துறையின் வாயிலாக பகுதி நேரமாக ஈரோட்டில் உள்ள தலைசிறந்த ஓட்டல்களில் பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஸ்காட்லாந்து, அமெரிக்கா, மலேசியா, மாலத்தீவு, துபாய், அபுதாபி, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பணியாற்றி வருகின்றனர். கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஆண்டுதோறும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பினைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.