காமாட்சி அம்மன் கோவில் அருகில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் அவதி
காஞ்சி காமாட்சியம்மன் கோவில் அருகே இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சன்னிதி தெரு மற்றும் மாட வீதிகளில், நடைபாதையை ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால், சாலையின் அகலம் வெகுவாக குறைந்துவிட்டதால், செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கோவில் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, சன்னிதி தெரு வழியாக அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று வரும் மாணவ- - மாணவியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, காமாட்சியம்மன் கோவில் சன்னிதி தெரு மற்றும் மாட வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக அகற்றுவதோடு, மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்."