அடையாளம் தெரியாத வாகனம் மோதி இன்ஜினியர் பலி
சமயபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இஞ்சினியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
ராஜசேகரன்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா துவாக்குடி மலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்வி குழுமத்தில் கட்டிட இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 7 ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சமயபுரம் அருகே பள்ளிவிடையில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜசேகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.