மேலூரில் சமத்துவ மீன் பிடி திருவிழா !
மேலூர் அருகே 3 வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற சமத்துவ மீன்பிடித் திருவிழா. பல்வேறு வகையான நாட்டு மீன்களைப் பிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது நாகப்பன்செவல்பட்டி இந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் உலக மாதா கோவிலுக்கு பாத்தியப்பட்டது அதிகாரி கண்மாய் . இதன் மூலம் சுமார் 100 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் வருடம் தோறும் அறுவடைக்குப் பின்பு இந்த கண்மாயில் சமத்துவ மீன் பிடி திருவிழா நடத்துவது வழக்கம். ஆனால் தண்ணீர் அதிகமாக இருந்து வந்த காரணத்தால் 3 வருடங்களுக்கு பிறகு இன்று இங்கு சமத்துவ மீன்பிடி விழா நடைபெற்றது.
அதன்படி இன்று மீன்பிடி திருவிழா நடத்துவது என்று முடிவு செய்த இக்கிராம மக்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து அதற்கான அறிவிப்பினை ஒரு வார காலத்திற்கு முன்பாகவே தண்டோரா மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நாகப்பன் செவல்பட்டி, மூவன் செவல்பட்டி, நெல்லுகுண்டுபட்டி, பூதமங்கலம், அட்டப்பட்டி, கொடுக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் சிங்கம்புணரி, நத்தம், சிவகங்கை,திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து இன்று அதிகாலை முதற்கொண்டு கண்மாயின் கரையில் காத்திருந்தனர்.
இந்நிலையில் கிராம முக்கியஸ்தர்கள் உலக மாதா கோவிலில் வழிபாடு செய்துவிட்டு கண்மாயின் மடைப் பகுதிக்கு வந்து இந்த வருடமும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்று வேண்டி வெள்ளை வீசினர்.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கண்மாயின் இருபுறமும் கச்சா , ஊத்தா, அரிவலை உள்ளிட்ட பல்வேறு மீன் பிடி உபகரணங்களோடு ஆவலோடு காத்திருந்த பொதுமக்கள் கண்மாய்க்குள் திபுதிபு என இறங்கி போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடிக்க தொடங்கினர். இதில் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கட்லா, அயிரை, கெண்டை, சிசி கெண்டை, ரோகு, விரால் உள்ளிட்ட பல்வேறு நாட்டு வகை மீன்களை மகிழ்ச்சியோடு பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தாங்கள் பிடித்த மீன்களை தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று உறவினர்களோடு சேர்ந்து சமைத்து மகிழ்ச்சியோடு உண்டு மகிழ்வர். இவ்வாறு சாதி மத பாகுபாடில்லாமல் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக சேர்ந்து மீன்பிடி திருவிழா நடத்துவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து மக்கள் வளம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.