நடுக்குப்பத்தில் விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை
நடுக்குப்பம் பகுதியில் விவசாயம் கை கொடுக்காததால் மது பழக்கத்திற்கு அடிமையான விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில் இருக்கும் நடுக்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் காளி (60). விவசாயியான இவருக்கு லட்சுமி (48) என்பவருடன் திருமணமாகி நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் காளி தனக்கு சொந்தமான சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் நெல் சாமை உள்ளிட்ட பயிர் வகைகளை விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இவர் செய்த விவசாயத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விவசாயம் கை கொடுக்காததால் மனம் உடைந்த காளி தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியதால் மது பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதனால் இவருக்கும் இவரது மனைவி லட்சுமிக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவசாயம் கை கொடுக்காததால் மனம் உடைந்த காளி தொடர்ந்து மனைவியுடனும் மது பழக்கம் காரணமாக வருகின்ற சண்டையை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து மதுவில் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இ
தனை அறிந்த உறவினர்கள் உடனே அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விவசாயி காளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.