பட்டா வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
சேலம் தளவாய்பட்டியில் பட்டா வழங்கக் கோரி பால்பண்ணை முன்பு விவசாயிகள் போராட்டம்
By : King 24x7 Website
Update: 2023-12-11 13:57 GMT
சேலம் மாவட்டம் தளவாய்பட்டி பகுதியில் அமைந்துள்ள சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு 54 ஏக்கர் விவசாய நிலத்தை 38 குடும்பத்தினர் சேர்ந்து வழங்கி உள்ளனர். இவர்களில் 5 பேருக்கு மட்டும் வீட்டுமனை பட்டா வழங்கி விட்டு மீதமுள்ள 33 குடும்பத்தினருக்கு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை. 44 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை பட்டா வழங்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் முன்னிலையிலும் தற்போதைய பால்வளத்துறை அமைச்சரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இதுவரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து ஏர், கலப்பையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ஆவின் பால்பண்ணை முன்பு போராட்டம் நடத்த போலீசாரிடம் 20 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு இருந்த நிலையில் கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்தும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் நேரடியாக வந்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.