அதிமுக வேட்பாளரை ஆதரித்து விவசாய சங்கம் பிரசாரம்
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை பிரசாரம் மேற்கொள்ள போவதாக தமிழக தேசிய முற்போக்கு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் கே.ஆர். சுப்பிரமணி தெரிவித்தார்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமியை ஆதரிக்கும் விதமாக அவரை நேரில் சந்தித்து தமிழக தேசிய முற்போக்கு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் கே.ஆர். சுப்பிரமணி என்கிற கே.ஆர்.எஸ்.மணி தலைமையில் விவசாய சங்கத்தினர் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.ஆர்.எஸ். மணி கூறும்போது, எடப்பாடியார் ஆசியுடன் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வி.டி. நாராயணசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இப்பகுதிக்கு வந்துள்ளோம்.
திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்.என்ற சுலோகத்தை எடப்பாடி யார் கூறினார்.அது இப்போது தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது.தமிழக முழுவதும் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சியினர் கலக்கமடைந்துள்ளனர். விவசாய குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதலில் அவருக்கு நன்றி தெரிவித்தோம்.அதனைத் தொடர்ந்து குடிமராமத்து திட்டத்தை அறிமுகப்படுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி குளங்களையும் தூர்வார தொடங்கினார்.
அவரது வழியில் இப்போது தமிழக இளைஞர்கள் பல்வேறு பகுதிகளில் தாங்களாக நிதி திரட்டி ஏரி குளங்களை தூர்வாரி வருகின்றனர். அந்த வகையில் இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ளார். எடப்பாடியார் ஆட்சிக் காலத்தின் போது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கினார்.
குறிப்பாக வேளாண் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.அவரது ஆசியுடன் தேனி நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டுள்ள வி.டி.நாராயணசாமியை ஆதரித்து வாக்குகள் சேகரிப்பதற்காக எங்களது சங்கத்தின் சார்பாக இங்கு வருகை தந்துள்ளோம்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஆண்டிபட்டி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என்று தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தினோம்.இதன் காரணமாக இளங்கோ என்ற பொறியாளரை நியமித்து ஆய்வு செய்ய அனுப்பி அந்த ஆய்வின் முடிவில் 30 பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட 320 குளங்களில் நீர் நிரப்பும் வகையில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்து, நிதி ஒதுக்கீடும் செய்தார்.ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
வி.டி.நாராயணசாமி இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவுடன் அடுத்த ஒரு ஆண்டுக்குள் அந்தத் திட்டங்களை நிறைவேற்றி தருவார் என நம்புகிறோம். தேனி மாவட்டத்தில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை, திராட்சை ரசத் தொழிற்சாலை ஆகியவை அமைக்கப்பட வேண்டும்.எந்த ஒரு பெரிய கூட்டணியும் இல்லாமல் இரண்டு கோடி தொண்டர்களை மட்டுமே நம்பி எடப்பாடி தற்போது தேர்தல் களம் காணுகிறார்.தமிழக முழுவதும் இரட்டை இலை வெற்றி பெறுவதற்கு மாபெரும் எழுச்சி காணப்படுகிறது.கொரோனா காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்திருந்த நேரத்தில் கூட தாயைப் போல அரவணைத்து தமிழகத்தை காப்பாற்றியவர் எடப்பாடி யார் என்று கூறினார்.