குடிநீர் கேட்டு விவசாயிகள் போராட்டம்

சங்ககிரி அருகே அரசிராமணி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-26 13:43 GMT

குடிநீர் கேட்டு போராட்டம் 

சேலம் மாவட்டம் , மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கும் கிழக்கு மற்றும் மேற்கு கரை வாய்க்கால்களில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காததால் கிழக்குக்கரை நீர்ப்பாசனத்திற்கு உட்பட்ட சுமார் ஒன்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர்யின்றி விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் தற்போது வறட்சி காலம் தொடங்கியதால் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கிழக்கரை நீர் பாசன வாய்க்கால் பகுதிகளான பொன்னம்பாளையம், கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி, அரசிராமணி,செட்டிபட்டி குள்ளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கால்நடைகளுக்குக் கூட குடிநீரின்றி தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், எனவே தமிழக அரசு குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து 15 நாட்களுக்கு கிழக்கு கரை நீர்ப்பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டுமெனவும் இது குறித்து பல முறை தமிழக அரசிடமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தமிழக அமைச்சர்களிடமும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதோடு பொதுப்பணித்துறை அலுவலரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

இதனால் அரசிராமணி குள்ளம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News