கோவிந்தநல்லுாரில் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் மழையால் சாய்ந்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி கோவிந்தநல்லுாரில் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-10 09:39 GMT

தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் மழையால் சாய்ந்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க கோரி கோவிந்தநல்லுாரில் வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதுார், திருப்பனந்தாள், அம்மாபேட்டை,ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில், நிலத்தடி நீர் ஆதாரமுள்ள இடங்களில் பம்புசெட் மூலம், சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். இந்நிலையில், மே மூன்றாவது வாரத்தில் பெய்த மழையால் தஞ்சாவூர், அம்மாபேட்டை, ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய வட்டாரங்களில் கதிர்களுடனான நெற்பயிர்கள் சாய்ந்தன.இருப்பினும் அம்மாபேட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவோணம் ஆகிய வட்டாரங்களில் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

மேலும், கடந்த வாரம் அவ்வபோது பெய்து வரும் மழையால் அம்மாபேட்டை,பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில், சுமார் இரண்டாயிரம் ஏக்கர் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் கதிருடன் வயலில் சாய்ந்துள்ளது. இதனால், ஏக்கருக்கு குறைந்தது 2,400 கிலோ மகசூல் கிடைத்தால் லாபம் இருக்கும் என்ற நிலையில், மழையால் பயிர்கள் சாய்ந்து போனதால், ஏக்கருக்கு சுமார் 1,800 கிலோ மட்டுமே கிடைப்பதால் கோடை பருவத்தில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

இதே போல் மெலட்டூர், பாபநாசம் ஆகிய பகுதிகளில் பருத்தி செடிகள் மழையில் வீணாகியுள்ளது. இதையடுத்து நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக கணக்கெடுப்பு பணியை துவங்கவும் உரிய நிவாரணம் வழங்க கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சிவா, மாவட்டத்தலைவர் செந்தில்குமார் ஆகியயோர் தலையிலான விவசாயிகள்  கோவிந்தநல்லுாரில் வயலில்  இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News