கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களால் விவசாயிகள் அவதி !
கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை ஆய்வு செய்து பாறை துகள்கள் காற்றில் பரவாதவாறு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-09 09:46 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் அருகே பவுஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில், ஏராளமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் செயல்படும் கிரஷர்களில் முறையான தடுப்பு வசதி இல்லாததால், கிரஷரில் உடைக்கப்படும் பாறைகளில் இருந்து அதிகப்படியான பாறை துகள்கள் காற்றில் பரவி, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் படிவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். காற்றில் பரவும் பாறை துகள் காரணமாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்படுவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். கிரஷர்கள் அமைந்துள்ள சுற்றுவட்டார பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி செடிகளின் மீது பாறை துகள் படிவதால் ஒளிச்சேர்க்கை நடைபெறாமல், இலைகள் சுருங்கி, காய் மற்றும் பிஞ்சுகள் கருகி விடுவதாக, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் கிரஷர்களை ஆய்வு செய்து, பாறை துகள்கள் காற்றில் பரவாதவாறு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.